கோவை 82வது வார்டில் உள்ள அரசு பள்ளிக்கு கணினி ஆய்வக இருக்கையை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய பின் பேசிய வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தாமல் மற்ற பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கோவை: கோவையில் பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் நிகழாமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும் என்று கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 82 வது வார்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கணினி ஆய்வக இருக்கைகளை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று வழங்கினார்.
சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மாணவ மாணவிகளுக்கான கணினி ஆய்வகத்தின் இருக்கைகளை வானதி சீனிவாசன் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
கோவை கணபதி பகுதி அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக 70 வருட பழமையான கோவில் இடிக்கப்பட்டு அதற்காக மாற்று நிலம் காவலர் குடியிருப்பு அருகே 3 சென்ட் அளவிற்கு வழங்கப்பட்டும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கோவிலில் இருந்த விக்கிரகங்கள் நிறுவப்படாமல் உள்ளது. எனவே, இந்து அறநிலையத்துறை உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நடவடிக்கை எடுக்கும் போது மாற்று இடம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியின் நடவடிக்கையை பாரபட்சமின்றி செய்ய வேண்டும்.
கோவில்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை திமுக கட்சி மன்றங்களை அகற்றுவதில் அதிகாரிகள் காட்டுவதில்லை. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கோவை மாநகராட்சியை புறக்கணிக்காமல் நல்ல சாலையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் மீண்டும் வைக்கிறேன். சென்னை மாநகராட்சி போன்று கோவையிலும் மேம்பாலங்களின் தூண்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
இதில் உண்மையான தகவல்களை மறைத்து ஓவியங்கள் வரையப்பட்டதாக கூறி அனைத்து தூண்களிலும் உள்ள ஓவியங்களை ஒரு தரப்பினர் அழிப்பது சேதப்படுத்துவது சரியான நடவடிக்கையாகாது. அதிகாரிகளிடம் அதனை முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற ஓவியங்கள் வரையப்படும் போது உண்மை தன்மையை ஆராய வேண்டும், என்றார்.
தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுகவினரின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது எதனை காட்டுகிறது என்றால் திமுகவினர் மீது அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதனை காட்டுகிறது.
எனவே முதலமைச்சர் அவரது கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தாமல், தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நிறுவனம் முடங்கிப் போகும் அளவிற்கு ஒரு தொகுதியில் தேர்தல் உள்ளது. இடைத்தேர்தலில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் முறையிட்டு வருகிறோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கோவை கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்திருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கும், பொதுமக்களை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நகர்ப்புற பகுதிகளிலேயே இது போன்ற வன்முறைகள் நடப்பது, ரவுடிகளுக்கு பயம் இல்லாத நிலையை காட்டுகிறது. எனவே, இதில் முதலமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.