விஸ்வரூபம் எடுக்கும் கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் - ஜீ ஸ்கொயருக்காக கைவிடப்படுகிறதா..? - சிறப்பு தொகுப்பு

ஒருங்கிணைந்த வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டம் கைவிடப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவை சிம்பிளிசிட்டி செய்தி குழு நடத்திய சிறப்பு கள ஆய்வு நடத்தியுள்ளது.



கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயமுத்தூர் தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இரண்டாவது நகரமாகும். சிறு குறு தொழில் கூடங்கள், ஐடி நிறுவனங்கள், வேளாண் தொடர்பு, ஏராளமான மருத்துவமனைகள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், வரலாற்றில் இடம்பெற்ற ஆன்மீக தலங்கள் இந்த ஊரின் அடையாளம்.

*கோயமுத்தூரின் கோயம்பேடாக உருவான வெள்ளலூர் பேருந்து நிலையம்

எந்த நகரமும் வளர்ச்சி அடைய போக்குவரத்து மிக முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. கோயமுத்தூரின் போக்குவரத்துக்கு ரயில் சேவையும், விமான சேவையும் இருக்கின்ற இதே வேளையில் பேருந்து போக்குவரத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

அதுவும் மெட்ரோ கோயமுத்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தாலும் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் விதமாக ஒருங்கிணைந்த பேருந்து போக்குவரத்தின் மேம்பாடு முக்கியமானதாக நகரின் மாஸ்டர் பிளான் கட்டமைப்பு வல்லுநர்கள் கருதி இருக்கின்றனர். அதனடிப்படையில் கோவையில் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று ஒரு பேருந்து நிலையத்தை கட்டமைக்க பரிசீலினை செய்திருக்கின்றனர்.

முன்னதாக கோயமுத்தூரில் காந்திபுரம் நகரின் போக்குவரத்துக்காக டவுன் பேருந்து நிலையம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல திருவள்ளுவர் பேருந்து நிலையம், நீலகிரி, மைசூர் மார்கமாக பயணம் செய்ய சாய்பாபா காலனி பேருந்து நிலையம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பகுதிகளுக்கான பேருந்து போக்குவரத்தை ஒன்றிணைக்க வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



*ஒருங்கிணைந்த வெள்ளலூர் பேருந்து நிலைய உட்கட்டமைப்பு

தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 61 ஏக்கரில் ஒருங்கிணைந்த வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்க கட்டுமான வல்லுநர்கள் உதவியுடன் டிராஃப் செய்யப்பட்டன.

காம்பிரிஹென்சி மொபிலிட்டி பிளான்-ல் 140 பேருந்துகள், 33 டவுன் பேருந்துகள், 80 ஆம்னி பேருந்துகள், 112 நிலையான பேருந்து நிறுத்துமிடங்கள், மருத்துவ சிகிச்சை மையம், தாய்மார்கள் அறை, சேமிப்பு அறை , போக்குவரத்து கழக அலுவலகங்கள், நேர கண்காணிப்பு அறைகள், ஏ டி எம்கள் , டிக்கெட் கவுண்டர்கள், உணவகங்கள் , வர்த்தக அலுவலகங்கள்,

110 நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், 1,200 இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் என பிரமாண்டமாக வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்ட கட்டுமான வல்லுநர்கள் உதவியுடன் கட்ட அதிமுக அரசாங்கம் முடிவெடுத்தது. அதற்கான கட்டுமான பணிகளும் நடக்க ஆரம்பித்தன.



*கேள்விக்குள்ளான வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டம்

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஆரம்பித்ததும் கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. நகரின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுக்கு பேருந்து போக்குவரத்து அத்தியாவசியம் என்றாலும் வெள்ளலூர் பேருந்து நிலையம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பட்டன.

குறிப்பாக திமுக இந்த கேள்வியை எழுப்பியிருந்தது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது அனைத்து பகுதிகளையும் ஒன்றினைக்கும் விதமாக அமைக்கப்படவில்லை என்றும் நகரின் முக்கிய இடங்களையும் , தளங்களையும் எளிதா இணைக்க இந்த பேருந்து நிலையம் பயன்படாது என்றும் எதிர் தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

கோயமுத்தூர் நகரம் மட்டுமின்றி சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு, வடமாவட்டங்களுக்கு இந்த பேருந்து நிலையம் பெருமளவில் பயன் தராது என்பது அவர்களின் வாதம். தென்மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலைக்கு 8 - 10 கிலோ மீட்டர் தொலைவு சென்னை, பெங்களூர், வட மாவட்டங்களை இணைக்கின்ற பிரதான சாலைக்கு 15- 17 கிலோ மீட்டர் தொலைவு இருப்பதனால் இந்த பேருந்து நிலையம் வளரும் கோயமுத்தூருக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து தளமாக இருக்காது என குற்றம்சாட்டினர். 

*விஸ்வரூபமாக வெடித்த வெள்ளலூர் பேருந்து நிலையம் விவகாரம் 

கோயமுத்தூருக்கான மாபெரும் கட்டமைப்புகளில் ஒன்றாக வெள்ளலூர் பேருந்து நிலையம் பார்க்கப்பட்ட நிலையில் இந்த பணிகள் முடியும் முன்னரே நிறுத்தப்பட்டன. 

குறிப்பாக பேருந்து நிலையத்துக்கான அடிப்படை கட்டமைப்புகள் நிறைவுற்று அடுத்தகட்ட பணிகள் நடக்கும் நிலையில் இந்த பணிகள் நின்று போயின. இது குறித்து குழு அமைக்கப்பட்டு கள ஆய்வும் ஆலோசனை கூட்டமும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகள் இனி நடக்காது என்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது சர்ச்சையாக வெடித்து விவாத பொருளாக மாறியிருக்கின்றது.

*ஜீ ஸ்கொயருக்காக ஒருங்கிணைந்த வெள்ளலூர் பேருந்து நிலையம் கைவிடப்படுகிறதா ? 

வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டுமானம் ஆரம்பித்த நிலையில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்த திமுக இன்றளவும் கைவிடவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினில் ஆரம்பித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரை பேருந்து நிலைய கட்டுமானம் குறித்த விமர்சனங்களை தெரிவித்திருக்கின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து பேசியிருக்கின்றனர். இந்த நிலையில் திமுக முக்கிய பிரமுகரின் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டெட் கட்டுமான நிறுவனத்துக்காக வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றன.

அதாவது ஜிஸ்கொயர் எல் அன் டி பை பாஸில் புதிதாக நவீன குடியிருப்பு ஒன்றை கட்டமைக்க பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர். காய்கறி கடை ஆரம்பித்து ஆடம்பர மால் வரையிலும் அவ்வளவு ஏன் ஹெலிக்காப்டர் தரை இறங்கும் அளவு வசதிகளுடன் தமிழ்நாட்டின் முதல் இண்டகரேட்டட் சிட்டி குடியிருப்பு கட்டுமானத்தினை ஆரம்பித்திருக்கின்றனர். 

 

இந்த குடியிருப்பின் வளர்ச்சிக்கு, போக்குவரத்து வசதிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலைய போக்குவரத்து வசதி தேவைப்படுவதனால் ஜீ ஸ்கொயருக்கு அருகாமையில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. 

 

*சிம்பிளிசிட்டி நடத்திய கள ஆய்வு

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் குறித்து சிம்பிளிசிட்டி செய்தி குழு கள ஆய்வு நடத்தியிருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு பிரத்யேக தகவல்கள் நமக்கு தெரியவந்திருக்கின்றன.

அதனடிப்படையில் முதல்கட்டமாக வெள்ளலூர் பேருந்து நிலையம் முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்பது தெரிவந்திருக்கின்றன. ஆனாலும் வெள்ளலூர் பேருந்து நிலையம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்வியும் எழும் விதமாகவே நமக்கு தகவல் கிடைக்கப்பெற்றன.

 

*அதிகாரிகள் என்ன சொல்கின்றனர் ?

பேசுபொருளாக மாறியிருக்கின்ற வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகள் நிறுத்தபட்டாலும் அந்த திட்டம் இன்னும் அரசாங்கத்தினால் முழுமையாக கைவிடப்படவில்லை. ஆய்வுக் குழு இன்னும் இரண்டு அல்லது கள ஆய்வினையும், வல்லுநர்களுடனான ஆலோசனை கூட்டத்தினையும் நடத்தவிருக்கின்றனர்.

இந்த ஆய்வும், ஆலோசனை கூட்டமும் முடிந்த பின்னரே வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்தான விவகாரத்துக்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிகாரிகள் நம்மிடையே தெரிவித்திருக்கின்றனர். கட்டுமான பணிகள் பெருமளவில் நடந்திருப்பதனால் இந்த விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது என்பது அவர்களின் வாதம். 

பல்வேறு தரப்பினரின் கருத்து ஆலோசனைகள் குழுவின் முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வு இருக்குமென அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜி ஸ்கொயருக்காக பேருந்து நிலையம் மாற்றப்படுவதாக எழுந்த சர்ச்சைக்கு முகாந்திரம் இல்லை என்றே தெரிகின்றது.

அதாவது ஜி ஸ்கொயருக்கான இன்டக்ரேட்டட் சிட்டி பிளேனிங் சமீக காலத்திலே தெரித்திருக்கின்றனர். ஆனால் வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்து எதிர் குரல் ஜீஸ்கொயர் வருகைக்கு முன்பே எழுப்பி இருக்கின்றனர். 

ஜி ஸ்கொயர் சிட்டி பிளேனிங் அடிப்படையில் பெரும் பொருளதார பின்புலத்து நமர்களே இங்கு குடியேற முடியும். அவர்கள் எந்த அளவுக்கு பேருந்து போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்ற கேள்வியும் பொதுவாகவே எழுந்திருக்கின்றன.

இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலையம் ஜீஸ்கொயருக்காக இடம் மாற்றம் செய்யப்படுவதாக வெளியான தகவலின் அடிப்படையில் வெடித்த சர்ச்சை எந்த அளவுக்கு உன்மை என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றன.

*ஆர்கிடெக்ட் என்ன சொல்கின்றனர் ?

கோயமுத்தூருக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அவசியம் என்று கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் ஆர்கிடெக்ட் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எல் அண்ட் டி பைபாஸ் சாலை சரியானது என்று தெரிவித்திருக்கின்றனர். ஆனால் வெள்ளலூரின் உட்பகுதியில் அமைக்கப்பட்டது ஒருங்கிணைந்த பேருந்த நிலையத்துக்கான சரியான தேர்வில்லை என்று மாஸ்டர் பிளான் ஆர்கிடெட்க்ட் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நகரின் உட்பகுதிகளுக்கு செல்ல விரிவான சாலை வசதி இல்லை, பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை சென்றடைய விரிவான சாலை இல்லை, பைபாஸுக்கு முன் அமைப்பட்டிருக்கின்ற பாலம் மற்றும் ரெயில் பயண தண்டவாள குறுக்கீடு போன்றவற்றினால் ஒங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பயணம் பயன்பாடு பெருமளவில் பொதுமக்களை சென்று சேராது என்று தெரிவித்திருக்கின்றனர்.

*ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உகந்த இடம் எது ?

கோயமுத்தூரின் வளர்ச்சிக்கான திட்டமிடலில் முக்கிய பங்காற்றும் சாலை போக்குவரத்தை பொறுத்தவரை நேரோ என்று சொல்லக் கூடிய நேர்க்கோட்டு அமைப்பில் அமைந்திருக்கின்றன. அதாவது அவிநாசி , திருச்சி சாலைகள் நகரின் முக்கிய சாலைகள் நேரோ சாலைகளாக அமைந்திருக்கின்றன.

அவிநாசி சாலைகளுக்கான பக்கவாட்டு சாலைகளாக சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலைகளும், திருச்சி சாலைக்கான பக்கவாட்டு சாலையாக பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளும் அமைந்திருக்கின்றன.

எனவே இந்த இரண்டு நேரோ சாலைகளுக்குள், பக்கவாட்டு சாலைகள் ஒன்றிணைக்க திருச்சி முதல் பொள்ளாச்சி சாலையிலேயே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக எல் அன்ட் டி பைபாஸின் அருகாமையிலேயே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று மாஸ்டர் பிளான் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

*எதிர்கால கோயமுத்தூருக்கு என்ன போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் தேவை ?

வளர்ந்து வருகின்ற கோயமுத்தூருக்கு கூடுதலாக டவுன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என ஆர்க்கிடெக்ட் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதாவது விரிவடைந்து வரும் நகரம் கட்டமைப்புக்கு இனங்க மேட்டுபாளையம் நோக்கி வெள்ளமடை, அன்னூர் நோக்கி நீலம்பூர், பொள்ளாச்சி நோக்கி வெள்ளலூர் போன்ற இடங்களில் டவுன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மாஸ்டர் பிளான் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக நகரின் வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து கட்டமைப்பு அவசியம் என்பதனால் சர்ச்சைகள் தவிர்த்து நவீன கட்டமைப்புடனான வசதிகளை பொதுமக்களுக்காக அமல்படுத்த கோரிக்கை எழுந்திருக்கின்றன. அரசாங்கம் திட்டங்களை தீட்டும் சமயத்தில் வல்லுநர்கள் குழுவுடன் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க்க வேண்டுமென தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...