வால்பாறை அருகே ஒருவாரத்திற்கு முன்பு விக்னேஷ் என்பவரது பைக் திருடப்பட்ட நிலையில், போலீசார் ஸ்டேன்மோர் பிரிவு கரும்பாலம் அருகே நடத்திய வாகன சோதனையில், திருடனை பிடித்து பைக்கை மீட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர்.
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரண்டு சக்கர வாகனங்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாரும் திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுகுனறா எஸ்டேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தை வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் உள்ள கடைவீதியில் நிறுத்தி வைத்திருந்துள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது, சிறிது நேரத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காவல்துறையினர் ஸ்டேன்மோர் பிரிவு கரும்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முனிசாமி என்பவர் இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் ஒருவாரத்திற்கு முன்பு திருடுபோன விக்னேஷின் வாகனம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து முனுசாமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.