வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ  4427 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ  4427 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர், என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


கோவை: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர், கு. ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தலைமையில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனிடையே, வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்: 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், விருப்பம் இல்லாதவர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. இதனிடையே, வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்களிக்க வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் வாக்குச்சாவடிக்கு ஒரு தன்னார்வலர் விதம் 4427 வாக்குச்சாவடிகளுக்கு 4427 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அவ்வாறு, நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உதவுவார்கள். வீல்சேர் மூலம் அவர்களை வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு அளிக்கும் இடம் வரை அழைத்து செல்வார்கள். இதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீல்சேர்கள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter