மின்வாரிய சர்வர் கோளாறு ; நாளை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக பொதுமக்கள் வேதனை

கோவை : மின்வாரிய சர்வரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இறுதி நாளான இன்று பணம் கட்ட முடியாததால் நாளை அபராத கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை : மின்வாரிய சர்வரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இறுதி நாளான இன்று பணம் கட்ட முடியாததால் நாளை அபராத கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை கோட்டத்திற்குட்பட்ட பீளமேடு கிழக்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் பீளமேடு காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் அமைந்துள்ளது. குறுகலான சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று இறுதி நாள் என்பதால், மின் கட்டணம் செலுத்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கணினியில் சர்வர் கோளாறு காரணமாக பணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. பெண்கள் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நீண்ட நேரம் காத்திருந்தும் சர்வர் பிரச்சினை தீர்க்கப்படாததால் அலுவலகத்தில் வாசலிலேயே அமர்ந்தபடி காத்திருந்தனர்.

இருப்பினும் மாலை வரை பிரச்சனை சரி செய்யப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வழக்கமாக இறுதி நாளில் பணம் செலுத்தாவிட்டால் மறு நாள் முதல் மின் கட்டணத்துடன் அபராத தொகை செலுத்த வேண்டும். மின்வாரியத்தின் அலட்சியத்தால் இது நேர்ந்துள்ள போதும் கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை சமூக ஆர்வலரான கன்ஸ்யூமர் வாய்ஸ் லோகு கூறுகையில், இதுபோன்ற மின் வாரிய அலுவலகத்தில் சர்வர் கோளாறு காரணமாக மின் கட்டணம் செலுத்த இயலாத நிலை இருந்தால் கையால் எழுதிக் கொடுக்கும் முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது எனவும் ஆனால் பெரும்பாலான மின் வாரிய அலுவலர்கள் கையால் எழுதிக் கொடுப்பதை கவனத்தில் கொள்ளாமல் சர்வர் சரி செய்யும் வரை காத்திருக்க வைப்பது மிகவும் தவறாகும் என கூறினார்.

மேலும், இன்று கடைசி நாள் என்ற நிலையில், நாளை அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு மின் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதே போல், மின்வாரியத்தின் பிற தேவைக்காக பணம் செலுத்துவோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எனவே இது போன்று அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு சர்வர் கோளாறு சரி செய்ய முடியாத பட்சத்தில் கையால் ரசீது வழங்க உரிய உத்தரவுகளை மின் வாரிய அலுவலர்கள் அனைத்து பிரிவு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter