News
கோவையில் இரண்டாவது நாளாக சிறப்பு சோதனை: பல்வேறு வழக்குகளில் கைது
SimpliCity News Team · 12 days ago

Coimbatore: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 09.11.2026 முதல் 11.11.2026 வரை நடைபெற்று வரும் தீவிர சிறப்பு சோதனையின் இரண்டாவது நாளான 10.11.2026 முதல் 11.11.2026 வரை, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும் காவல்துறை தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் ஆணையர் (பொறுப்பு) R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்படி இந்த சிறப்பு சோதனை (Special drive) மேற்கொள்ளப்பட்டது. காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து ஆகியோரின் மேற்பார்வையில், 7 காவல் உதவி ஆணையர்கள் மற்றும் 40 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கோவை மாநகரம் முழுவதும் ரவுடிகள் கண்காணிப்பு, போதைப்பொருள் குற்றவாளிகள் தணிக்கை, கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்காணிப்பு, போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களையும் தடுக்கும் வகையில் தொடர்ந்து ட்ரோன் கேமரா (Drone Camera) மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் அமர்ந்து மது அருந்திய நபர்கள் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 31 நபர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என மொத்தம் 193 நபர்கள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் 14 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், 24 நபர்கள் மீது நன்னடத்தைப் பிணையம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 66 நபர்கள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய முன்தண்டனைக் குற்றவாளிகள் மற்றும் பிணையில் வெளியே வந்த நபர்கள் என மொத்தம் 91 நபர்கள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
சிறப்பு வாகனத் தணிக்கையின்போது, மது போதையில் வாகனம் ஓட்டிய 372 நபர்கள் மீதும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 99 நபர்கள் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 251 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்படி சோதனையின் போது, நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாமல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 7 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகரில் தனியாக வசித்து வரும் மூத்த குடிமக்கள் மீதான குற்றங்களை தடுக்கும் வகையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசர கால காவல் உதவி செயலி, காவல்துறை அவசர கால தொலைபேசி எண்கள் ஆகியவையும் வழங்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட சிறப்பு சோதனைகள் மூலம் ரவுடிகள், போதைப்பொருள் குற்றவாளிகள், கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கோவை மாநகர காவல்துறை சார்பில் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
