News
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டில் 15 சவரன் நகை திருட்டு - உறவினர் பெண் கைது
SimpliCity News Team · 12 days ago

Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியில் வீட்டில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை திருடுபோன சம்பவத்தில், உறவினர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, 12 மணி நேரத்திலேயே நகையும் மீட்கப்பட்டுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் கற்பூர நகரில் தனது மனைவி, தாய் மற்றும் தந்தையுடன் குடியிருந்து வருகிறார் தினேஷ் பாபு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அன்னூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
ஒரு நாள் கழித்து தீபாவளி பண்டிகை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு மற்றும் பீரோ எதுவும் உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை மட்டும் காணாமல் போயிருந்தது கண்டு தினேஷ் பாபு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தினேஷ் பாபுவின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் அருகில் உள்ள நாயக்கனூரில் தங்களது உறவினர் பெண்ணான சுசீலா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தது கண்டறிந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசீலா, அதிகாலை நேரத்தில் தினேஷ் பாபுவின் வீட்டிற்கு வந்து சாவி வைத்திருந்த இடம் தெரிந்து அதை எடுத்து வீட்டைத் திறந்து, வீட்டில் இருந்த பீரோவையும் திறந்து அதில் இருந்த 15 சவரன் தங்க நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 12 மணி நேரத்தில் சுசீலாவை பிடித்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். உறவினர் பெண்ணே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.