News
கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் பைக் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இருவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
SimpliCity News Team · 9 hours ago

Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் அதிவேகமாக பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதை ரீல்ஸாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இருவர் மீது கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேரன் நகர் சந்திப்பு முதல் சங்கனூர் ரோடு சந்திப்பு வரை உள்ள மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் நள்ளிரவு நேரங்களில் பைக்குகளை அதிவேகமாக ஓட்டி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
விசாரணையில், மேம்பாலத்தில் பைக் முன்பக்க சக்கரத்தை தூக்கி ஆபத்தான முறையில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டதும், அதனை ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து லைக்ஸ் அள்ள முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும் பைக்கை ஓட்டியதாக ஆர்.எஸ்.புரம் சி.டி.டி காலனி சுந்தரம் வீதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ் (21) மற்றும் துரைசாமி என்பவரது 17 வயது மகன் ஆகிய இருவர் மீது கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வாலிபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
