News
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் கைது - 2.72 கிலோ கஞ்சா, 2,980 போதை மாத்திரைகள் பறிமுதல்
SimpliCity News Team · 14 hours ago

Coimbatore: கோவை சிங்காநல்லூர் மற்றும் ராமநாதபுரம் போலீஸ் எல்லைகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட விமான நிலையம் பின்புறம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, கருப்பராயன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் மதுரை அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த மணியாண்டி மகன் மாதவன் (23 - தற்போது சின்னியம்பாளையத்தில் வசிப்பவர்), சின்னியம்பாளையம் அண்ணா நகர் தொட்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ரபிகர் (22), பீளமேடு தண்ணீர் பந்தல் வி.கே.ரோடு முத்துமாரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மணி மகன் ஜெயராஜ் என்ற தொட்டிஜெயா (28 - தற்போது கொடிசியா ரோடு குருசாமி நகரில் வசிப்பவர்), சூலூர் பள்ளபாளையம் ஒட்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ஆகாஷ் (19 - தற்போது காந்திமாநகரில் வசிப்பவர்) மற்றும் நீலம்பூர் முதலிபாளையம் பிரிவு வேலாயுதம் நகரைச் சேர்ந்த ரவிகுமார் மகன் தமிழரசன் (20) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ 500 கிராம் கஞ்சா, வலி நிவாரணி மாத்திரையான 2,830 டாபென்டடால் போதை மாத்திரைகள் மற்றும் 150 நைட்ரஜபம் தூக்க மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 5 பேரையும் கைது செய்த சிங்காநல்லூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகரில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேசன் சரகத்திற்கு உட்பட்ட 80 அடி ரோடு, சாவித்திரி நகர் பகுதியில் ஒரு வாலிபர் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் விற்பனைக்காக சிறு சிறு பொட்டலங்களாக வைக்கப்பட்டு இருந்த 220 கிராம் கஞ்சா மற்றும் 7 பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் நஞ்சுண்டாபுரம் ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சஞ்சய் (18) என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சஞ்சயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.