News
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த மத்திய சிறை தலைமை காவலர் மற்றும் கூட்டாளி கைது
SimpliCity News Team · 15 hours ago

Coimbatore: போத்தனூர் ரயில் நிலையம் அருகே நகை வியாபாரியிடம் காவலர்கள் எனக் கூறி ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், கோவை மத்திய சிறை தலைமை காவலர் பட்டுராஜா உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லாம் அளித்த புகாரில், தான் மீன் வியாபாரி என்றும், மீன் விற்ற பணமான ரூ.5 லட்சத்துடன் கேரளா செல்ல ஆட்டோவில் வந்த போது காவலர்கள் எனக் கூறி மறித்து பைக்கில் கடத்திச் சென்று பணத்தைப் பறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் போத்தனூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பாதிக்கப்பட்டவர் மீன் வியாபாரி அல்ல, மாறாக பெரிய நகை வியாபாரி என்பதும், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட தொகை ரூ.5 லட்சம் அல்ல, சுமார் ரூ.15 லட்சம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்தத் துணிகர வழிப்பறியில் கோவை மத்திய சிறையில் தலைமை காவலராக பணியாற்றிய பட்டுராஜாவுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கூட்டாளி இத்ரீஸ் அகமதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிறை காவலர் பட்டுராஜாவுக்கு ரூ.50 லட்சம் அளவுக்கு கடன் சுமை இருந்துள்ளது. அந்தக் கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்பதற்காக அவர் குறுக்கு வழியை நாடியுள்ளார். இதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த பழைய குற்றவாளி முருகனின் ஆலோசனையைப் பெற்றுள்ளார். முருகன் தனக்கு அறிமுகமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணுவை பட்டுராஜாவுக்கு அறிமுகம் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் கோவையில் ரகசியமாகச் சந்தித்து திட்டம் தீட்டியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த மைமூன் குறைந்த விலையில் பழைய நகைகளை வாங்கி, அவற்றை உருக்கி புதிய ஆபரணங்களாகத் தயாரித்து கோவைக்கு வந்து விற்பனை செய்வதை விஷ்ணு தெரிந்துகொண்டார். தொடர்ந்து நகை வியாபாரி முகமது அஸ்லாமின் நடமாட்டத்தை அவர்கள் தீவிரமாகக் கண்காணித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, மைமூனிடம் இருந்து 120 கிராம் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு, அதை விற்று வந்த பணமான ரூ.15 லட்சத்துடன் முகமது அஸ்லாம் போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். இதைக் கச்சிதமாக மோப்பம் பிடித்த விஷ்ணு, பட்டுராஜா கும்பலுக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்தவுடன், பட்டுராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான இத்ரீஸ் அகமது, இப்ராகிம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். தங்களிடம் காவல்துறை அதிகாரம் இருப்பதாகக் கூறி முகமது அஸ்லாமை மறித்து, ஹவாலா பணம் உள்ளதா எனக் கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர், க.க. சாவடி அருகே அவரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு ரூ.15 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இப்ராகிம் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கு இடையே, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய சிறை தலைமை காவலர் பட்டுராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காவல் துறையினரே இதுபோன்று வழிப்பறிச் செயலில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.