News
கோவையில் மாணவன் தற்கொலை வழக்கில் ஆசிரியர்களைக் கைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டம்
SimpliCity News Team · 15 hours ago

Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் (16) என்ற மாணவர் தற்கொலை வழக்கில், தொடர்புடைய ஆசிரியர்களைக் கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அகிலன் குறித்து, பள்ளி ஆசிரியர்கள் அவரது சாதி குறித்து சக மாணவர்கள் முன்னிலையில் பேசியதாகவும், இதனால் சக மாணவர்கள் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் என நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஆசிரியர்கள் கைது செய்யப்படாததைக் கண்டித்து, அகிலனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கடந்த மூன்று நாட்களாக மாணவரின் உடலைப் பெறாமல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பள்ளியில் சாதியப் பாகுபாட்டுடன் பேசப்படுவதாக முன்னாள் மாணவர் ஒருவர் ஆட்சியரிடம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின்போது, இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களைக் கைது செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும், அதுவரை அகிலனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் பெற்றோரும் முற்போக்கு அமைப்பினரும் தெரிவித்துள்ளனர். இரண்டு மாணவர்களைக் கைது செய்த காவல்துறையினர், ஆசிரியர்களைக் கைது செய்ய மறுப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.