News
சரவணம்பட்டியில் ஆவணமின்றி தங்கிய உகாண்டா பெண்கள்: வீட்டு உரிமையாளர் மீது வழக்கு
SimpliCity News Team · 14 Oct 2026

Coimbatore: சரவணம்பட்டி கீரணத்தம் சாம்பிராணி குட்டை அருகே உள்ள ஆட்டோ கேரேஜின் முதல் தளத்தில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கண்டுபிடித்து, அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஆட்டோ கேரேஜின் முதல் தளத்தில் வெளிநாட்டுப் பெண்கள் தங்கி இருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் காளிமுத்து உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, உகாண்டா நாட்டைச் சேர்ந்த புரோசி நந்தலே மற்றும் நளுக்வா பெட்டி ஆகிய இரு பெண்கள் அங்கு தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி தங்கி இருந்ததால், திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி வெளிநாட்டினருக்கு வீடு வாடகைக்குக் கொடுத்த வீட்டு உரிமையாளரான சுரேஷுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சுரேஷ் முறையான விளக்கம் அளிக்காததால், அவர் மீது குடியுரிமைச் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.