News
ஆசிரியரின் அனுபவத்தையும் ஞானத்தையும் AI-யால் கற்றுத்தர முடியாது – KCT கல்லூரி நிகழ்ச்சியில் இயக்குநர் ராம்
SimpliCity News Team · 14 days ago
Coimbatore: கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காட்சித் தொடர்பியல் துறை சார்பில் நடைபெற்ற "சிறகுகள்" நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ராம், AI மூலம் தகவல்களை நொடிப்பொழுதில் பெற முடியுமே தவிர, ஒரு ஆசிரியர் நேரடியாக மாணவருடன் இருந்து வழங்கும் அனுபவத்தையும் ஞானத்தையும் AI-யால் கற்றுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
முன்னாள் மாணவர்களின் சிறப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காட்சித் தொடர்பியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்களின் தொழில்முறை பயணங்கள் மற்றும் சாதனைகள் கொண்டாடப்பட்டன. மேலும், தமிழ் படைப்பிலக்கியம் மற்றும் சமகால சினிமா தொடர்பான சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் மதி புகழேந்தி, தொழிலதிபர் சுரேந்தர் நளினி மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம், காதல் மனிதனை இளமையாகவும், சாகசம் செய்யக்கூடியவனாகவும், கவிஞனாகவும், புரட்சியாளனாகவும் மாற்றுகிறது என்று கூறி சிறப்புரையாற்றினார். தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கில ஆசிரியர் மூலம் ஷேக்ஸ்பியரின் கவிதையை புரிந்துகொண்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், ஆசிரியர்கள் வெறும் பாடங்களை கற்றுக் கொடுப்பவர்கள் அல்ல என்றும், தங்களது அனுபவம் மற்றும் ஞானத்தை மாணவர்களுடன் பகிர்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல என்றும், நண்பர்களுடன் பழகி, உலகத்தையும் மனிதர்களையும் சமூகத்தையும் புரிந்துகொண்டு, புதிய விஷயங்களை ஆராய்ந்து விரிவுபடுத்துவதற்கான இடம் என்றும் இயக்குநர் ராம் தெரிவித்தார். AI வளர்ந்து வரும் நிலையில், தகவல்கள் அனைவருக்கும் பொதுவானதாக மாறி வருவதாகவும், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு கலை, மனிதநேயம் மற்றும் சமூகத்தைப் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் அவசியமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கலை மற்றும் மனிதநேயத் துறைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் எனவும் இயக்குநர் ராம் நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்கள் வேலைக்காக மட்டுமே கல்லூரிக்கு வராமல், தங்களுக்குள் இருக்கும் தேடல், படைப்பாற்றல் மற்றும் சமூகத்தைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.