News
கோவை சரவணம்பட்டியில் கூலி தொழிலாளி மீது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்
SimpliCity News Team · 14 days ago

Coimbatore: கோவை சரவணம்பட்டி வெள்ளக்கிணறு பகுதியில் கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூவர் அடங்கிய கும்பல் அவரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில், காயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 42) தற்போது கோவை கணபதி மணியகாரன்பாளையம் விறகு கடை பஸ் நிறுத்தம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து, தனது மகனுடன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதியன்று துரைசாமியின் அண்ணன் மகன் லோகு வெள்ளக்கிணறு பகுதிக்கு கள் குடிப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணம்பட்டி கிருஷ்ணகவுண்டர் திருமண மண்டபம் பின்புறம் வசிக்கும் ராமசாமியின் மகன் கிளி (எ) வெங்கடேஷ் (எ) பாலகுமார் (வயது 40) என்பவருக்கும் லோகுவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு, லோகுவை வெங்கடேஷ் தாக்கியிருந்தார். இந்த விவரத்தை அறிந்த துரைசாமி, மறுநாள் 28-ந் தேதி காலை 8 மணி அளவில் வெள்ளக்கிணறு கள்ளுக்கடைப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த வெங்கடேஷிடம் தனது அண்ணன் மகனை ஏன் தாக்கினாய் என்று கேட்டு நியாயம் கேட்டார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் துரைசாமி, வெங்கடேஷை தாக்கிவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிவிட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து துரைசாமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு துரைசாமியை தகாத வார்த்தைகளால் வசைபாடிய அந்த கும்பல், அவரது கை விரல்களில் பலமாகத் தாக்கியதோடு முகத்திலும் சரமாரியாகக் குத்தி ரத்தக் காயங்களை ஏற்படுத்தியது. பலத்த காயமடைந்த துரைசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட வெங்கடேஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அவருடன் வந்த மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.