கோவை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) கோவை மாநகர மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், சட்ட ஆலோசகர் ஐயப்பன் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவையும் கடுமையாக விமர்சித்து ஆவேசப் பேச்சாற்றினார்.
கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கழகத்தின் 22-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா கோவை காட்டூர் முட்டை மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன், "மக்கள் பிரச்சனைக்காக, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை எதிர்த்துச் சிங்கம் போன்று ஜெயலலிதா அம்மையாரையே சட்டமன்றத்தில் நேருக்கு, நேர் கேள்வி கேட்ட ஒரே தலைவன் நம்ம கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான்! அவர் வந்தால் நம்மால் முதல்வராக முடியாது என்ற பயத்தில் தான் அவரை அரசியல் ரீதியாக வீழ்த்தினார்கள்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "இன்றைக்குச் சட்டமன்றத்தில் நடப்பதைப் பார்த்தால் நாம் குஸ்தி மைதானத்திற்குச் செல்லவே தேவையில்லை. தினமும் ஒரு பிரச்சனை, தினமும் சிரிப்பான பேட்டிகள் நடக்கிறது. மனமார்ந்த நன்றி என்று சொல்வதற்குப் பதிலாக 'மன்மத நன்றி' என்று சொல்லும் அளவுக்குச் சட்டமன்றம் ஒரு நகைச்சுவை மன்றமாக மாறிவிட்டது" என அனல் பறக்கப் பேசினார்.
தவெக கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடிய ஐயப்பன், "இன்று ரீல் மோகத்தில் ஆட்சி நடத்துகிறோம் என்ற போர்வையில் பல தவறுகள் நடக்கிறது. லாட்டரி சீட்டு தொழிலைச் செய்து கொண்டு, இன்று தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யா அல்லது ஆதவ் அர்ஜுனாவா என்ற சந்தேகமே மக்களுக்கு வந்து விட்டது. தி.மு.க வின் டேட்டாக்களைத் திருடி வந்தவரை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். மக்கள் செய்த தவறால் தான் இப்படிப்பட்ட நிலைமை வந்து உள்ளது" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கையெடுத்து கும்பிட வேண்டும் என்று குறிப்பிட்ட ஐயப்பன், "அவர்களை விட மோசமான ஆட்சியை இவர்கள் நடத்துகிறார்கள். ஒரு சுகாதாரத் துறை அமைச்சர் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அனைவரும் முழுக்கை சட்டை போடுங்கள் என்று விசித்திரமான தீர்வு சொல்கிறார்" எனக் கிண்டலடித்தார்.
கேப்டன் விஜயகாந்த் போன்ற ஒரு நல்ல மனிதரைத் தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள் என்றும், அவர் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி ஐயப்பன் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த முப்பெரும் விழாவில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.


