Coimbatore: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதசாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (41) என்பவர், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க ஜாதியினரால் மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் உள்ளாவதாக புகார் அளித்துள்ளார். கோவை பந்தயசாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி ரம்யா பாரதியை சந்தித்த அவர், இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.
மனு அளிப்பதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரகாஷ், தனது ஊரை சேர்ந்த கவுண்டர் நஞ்சப்பனின் மகன் ராஜா என்கிற செல்வகுமார் அதிமுக கட்சியில் இருந்து வருவதாகவும், 2010ம் ஆண்டு தனது வீட்டு சுவற்றில் கட்சி விளம்பர படம் எழுத அவர் கேட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததில் இருந்து பிரச்சனை ஆரம்பித்ததாகவும், அது இன்று வரை தொடர்வதாகவும் கூறினார்.
தற்போது நஞ்சப்பனின் மகன் ராஜா என்கிற செல்வகுமார், மற்றும் எல்லப்பன் என்பவரது மகன் திமுகவை சேர்ந்த ராஜி ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 28.07.2026ம் தேதி தனது வீட்டின் அருகே வந்து ஜாதிய ரீதியாக தனது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி, திட்டி வீட்டு வாசலில் காரி உமிழ்ந்ததாக பிரகாஷ் தெரிவித்தார். இதனை கேள்விப்பட்டதற்காக தன்னை திட்டி, ஜேசிபி கொண்டு வீட்டு திண்ணை மற்றும் படிக்கட்டுகளை இடித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அந்த புகாரின் பேரில் எஸ்.சி/எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்றும் பிரகாஷ் தெரிவித்தார். இதனால் தினமும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஜாதியின் பெயரை சொல்லி மிரட்டுவதுடன், குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாக அவர் கூறினார்.
மேலும் ஊர் பொது சாலையில் தங்களால் நடக்க கூடாது என தெரிவித்து வருவதாகவும், வீட்டு முன்பாக காரி துப்பி அசிங்கப்படுத்தி வருவதாகவும் பிரகாஷ் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் அளித்திருந்த புகாரையும் சமரசம் செய்து தள்ளுபடி செய்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாகவும், புகார் அளித்த தனக்கு எந்த விசாரணையும் நடத்தாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த வழக்கை உரிய விசாரணை நடத்தி, தாழ்த்தப்பட்ட தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பிரகாஷ் கோரிக்கை வைத்தார்.

