அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்துள்ளதை கண்டித்து, பல்லடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் 25 க்கும் மேற்பட்டோர் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் ஈஸ்வர மூர்த்தி, வடக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் மணிராஜ், தெற்கு வட்டார தலைவர் புன்னியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.