News
கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 6 கடைகளுக்கு 'சீல்'
SimpliCity News Team · 08 Feb 2023
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்கெட் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு வரிவசூல் முகாமில் ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 45இல் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்கெட் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள கடைகளை சுற்றுவட்டார வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத 16 கடை உரிமைதாராகளுக்கு கடந்த 03ஆம் தேதி நிலுவைத் தொகை செலுத்த கோரி மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எம்.ஜி.ஆர் மார்கெட் வளாகத்தில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது. இதில் வாடகை பாக்கி வைத்திருந்த 16 பேரில் 10 கடை உரிமையாளர்கள் வாடகை நிலுவைத் தொகையை செலுத்தினர்.
மீதமுள்ளவர்கள் வாடகை செலுத்தாத காரணத்தால் உதவி ஆணையாளர் (மேற்கு), சிறப்பு வருவாய் ஆய்வாளா மற்றும் வரிவசூல் ஆகியோரால் கீழ்க்கண்ட ஆறு கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதற்கான ஆணைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ரூ.15,04,054/- வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.