Govt Notification
கோவையில் சீமை கருவேலம் மரத்திற்கு பதில் நாட்டு கருவேலம் மரம் வெட்டிய ஒப்பந்ததாரருக்கு ரூ.1,27,000 அபராதம்
SimpliCity News Team · 13 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் சீமை கருவேலம் மரங்களை வெட்டும் பணியை ஏற்றிருந்த ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு ரூ.1,27,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியில் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு JCB வாகனங்கள் மாநகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப அவர்களின் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளிலுள்ள சீமை கருவேலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை பொது ஏல முறையில் தேர்வான ஒப்பந்ததாரர் தி/ள். முபசீரா ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால், அந்த நிறுவனம் பணி உத்தரவில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாமல், சீமை கருவேலம் மரத்திற்கு பதிலாக நாட்டு கருவேல மரங்களை வெட்டியுள்ளது கண்டறியப்பட்டது.
இச்செயல் பணி நிபந்தனைகளை மீறிய செயலாகும். உதவி செயற்பொறியாளர் (திட்டம்), தெற்கு அவர்கள் 22.10.2026-அன்று மேற்கொண்ட கள ஆய்வில் இத்தகைய செயல் கண்டறியப்பட்டது. அவரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், தி/ள். முபசீரா ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கு, வெட்டப்பட்ட நாட்டு கருவேல மரத்தின் மதிப்பு ரூ.77,000-உடன், அபராத தொகையாக ரூ.50,000 சேர்த்து மொத்தம் ரூ.1,27,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட நிறுவனத்தினர் ஏல நிபந்தனைகளை மீறியமைக்காக, நாட்டு கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பயன்படுத்திய இரண்டு லாரிகள் (TN33 X 8890 மற்றும் TN 39 AM 9099) மற்றும் இரண்டு JCB வாகனங்கள் (TN99 K 0284 மற்றும் TN99 K 9466) மாநகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்பட்டன. மீண்டும் இது போன்ற நிகழ்வு நடைபெற்றால் அவர்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.