Govt Notification
வடகிழக்கு பருவமழையையொட்டி கோவை மத்திய மண்டலத்தில் அதிக மழைநீர் தேங்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
SimpliCity News Team · 13 hours ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையையொட்டி, கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அதிக மழைநீர் தேங்கும் இடங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.
கோயமுத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது, மாநகராட்சி அலுவலர்களால் நேரில் கள ஆய்வு செய்யப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது. இந்த வகையில், அக்டோபர் 23, 2026 அன்று மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட நீதிமன்ற வளாகம் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளை ஆட்சித்தலைவரும் ஆணையாளரும் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது, அதிக மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கி, மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், மழைநீர் தேங்கினால் அதனை உடனடியாக வெளியேற்ற மோட்டார், பம்பு, நீர் உறிஞ்சும் வாகனங்கள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண்.45-க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, எம்.ஜி.ஆர் மார்க்கெட் நுழைவாயிலில் உள்ள சிறுபாலத்தில் (Culvert) மழையினால் அடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனை தவிர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிறுபாலத்தினை அகற்றிவிட்டு, புதிதாக precast box சிறுபாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஆட்சித்தலைவரும் ஆணையாளரும் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில், மழைக்காலத்தில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்திடும் வகையில், புதிதாக அமைக்கப்பட உள்ள precast box சிறுபாலம் கட்டும் பணியின்போது 5 மீட்டர் இடைவெளியில் ஒரு இயந்திர குழி ஏற்படுத்திடுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண்.38-க்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சாலை, அஜ்ஜனூர் சாலை சந்திப்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதை ஆட்சித்தலைவரும் ஆணையாளரும் நேரில் பார்வையிட்டார்கள்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மண்டலம், வார்டு எண்.99க்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைப்பதற்கு புதிதாக மூன்று குட்டைகள் (LAGOON) அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினையும், வார்டு எண்.89-க்குட்பட்ட கண்டக்காமுத்தூர் குளத்திற்கு, செங்குளம் பேரூர் செல்லும் வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை, நீர் இறைக்கும் நிலையம் மூலமாக குளத்திற்கு ஏற்றும் பணியினையும் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சங்கர், மண்டல உதவி ஆணையர்கள் முத்துசாமி, கணேசன், நர்மதா, செயற்பொறியாளர்கள் ஜாக்குலின் ஜாய் லதா, ஜெகன், உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, கனகராஜ் (பொ), சரவணக்குமார் (பொ), மாமன்ற உறுப்பினர்கள் முருகேசன், செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், சந்தீப்குமார், சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

