Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு இயக்கம் தொடர்பான பிரச்சாரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் அவர்களால் இன்று (06.10.2026) தொடங்கி வைக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அவர்களின் முன்னிலையில், மாநகராட்சி பகுதிகளில் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் இந்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை பவன்குமார் கிரியப்பனவர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மழைநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் முன்னிலையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மாதிரி காட்சியை பார்வையிட்டார். நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சிப்படுத்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மேற்கூரை மழைநீர் சேகரிப்பு, மழைநீர் செல்லும் கால்வாய்கள், வடிகட்டும் அமைப்புகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் பகுதிகள், பசுமைப் பகுதிகள் மற்றும் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் வசதிகள் உள்ளிட்ட முக்கிய சிறப்பு அம்சங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மழைநீர் வீணாவதைத் தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், நிலையான நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்பது இந்நிகழ்வின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்கள் த.குமரேசன், சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் நர்மதா (மேற்கு), கணேசன் (மத்தியம்), முத்துக்குமார் (தெற்கு), தட்சிணாமூர்த்தி, மோகனசுந்தரி (கிழக்கு, வடக்கு), மகேஷ்கனகராஜ் (வருவாய்), செயற்பொறியாளர்கள் தேவதாஸ், ஜெகன், ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி (பொ), இளங்கோவன் (பொ), கனகராஜ் (பொ), சரவணக்குமார் (பொ), மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் கல்யாணசுந்தரம், சக்திவேல், உத்தமன், முரளிதரன், ஜெயின்ராஜ், சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.



