Govt Notification
தடுப்பூசி போட்டாச்சா? நாளை கோவையில் 269-மையங்களில் கோவிட்-19 மெகா தடுப்பூசி முகாம்.!!
SimpliCity News Team File Photo · 22 Oct 2021
கோவை: கோவிஷீல்டு முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் 84-நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் 28-நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உத்தரவின்படி கோவிட் -19 மெகா தடுப்பூசி முகாம் 23.10.2021 அன்று சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் 269-மையங்களில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் 85-90% நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் மாநகராட்சிப்பகுதியில் 1,73,914 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரம் இல்லாமல் இருக்கும் என்றும், மேலும் உயிர்ச்சேதம் அறவே இருக்காது என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவிஷீல்டு முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் 84-நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதே போல கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் 28-நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இவர்கள் அனைவரும் வரும் 23.10.2021-சனிக்கிழமை அன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கும், அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வதற்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எனவே, முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.