Govt Notification
கோவையில் உங்கள் தெருக்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் 1077 என்ற டோல் ஃப்ரீ எண்ணிற்கு உடனே அழைக்கவும் - சுகாதாரத் துறை அறிவிப்பு..!
SimpliCity News Team · 21 Oct 2021
கோவை: கோவை பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தண்ணீர் போல் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, பலரும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவர். சுத்தமில்லாத உணவு மற்றும் தண்ணீரைப் பருகுவதால், வயிற்றுப்போக்கு தொந்தரவும் ஏற்படுகிறது.
எனவே, இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுத் தண்ணீர் தொட்டிகளை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மேலும், தங்கள் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில்,
''மழைக்கால தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும், 12 மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவினர், எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் வயிற்றுப்போக்கு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது என ஆய்வு செய்வர்.
நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். பள்ளிகளில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைக்கென, 24 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதிகளில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.