Govt Notification
பயணிகள் கவனத்திற்கு..! கொடீசியா தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கம்
SimpliCity News Team Photos M Balaji · 26 Oct 2019

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, கொடீசியா நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பயணிகள் மற்றும் வாகனங்கள் வந்து செல்வதால் கோவை காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா சாலை, மத்தியப் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் மற்றும் அவினாசி சாலை ஆகிய இடங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வண்ணம் இம்முறை காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து கொடீசியா நுழைவு வாயில் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்துள்ளது.

இதனையடுத்து, அக்டோபர் 25ம் தேதி காலை 06.00 மணி முதல் 27ம் தேதி வரை சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கொடீசியா நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் ஏனைய பேருந்துகளான திருப்பூர் வழி பல்லடம், அவினாசி, ஈரோடு, நாமக்கல், அந்தியூர், கோபி ஆகிய பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.
அதன்படி, கொடீசியா நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் கருதி குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, நிழற்குடை வசதி ஆகியவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் கொடீசியா நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் நேர விரயமின்றி, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.