Govt Notification
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
SimpliCity News Team File Photo · 26 Oct 2019

கோவை : கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பெற்றோர் கண்டிப்பாக உடனிருந்து பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதை கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர், மணல் போன்றவற்றை அருகில் முன்னெச்சரிக்கையாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவர், கடைசி நேரத்தில் பொருட்களை வாங்க கடை வீதி செல்லும் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பான முறையில் சென்று வர ஏதுவாக கூட்ட நெரிசல் உள்ள அனைத்து பகுதிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கையாக முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதேபோல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் தங்குதடையின்றியும் காலவிரயமின்றியும் சென்றுவர ஏதுவாக முக்கிய இடங்களில் போக்குவரத்து ஓழுங்குபடுத்த காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழக காவல் துறை இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி சுங்கச்சாவடிகளில் காலவிரயத்தைத் தவிர்க்கும் பொருட்டு அங்கும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் யாவரும் போதிய ஒத்துழைப்பு நல்கி இந்த தீபாவளி திருநாளை விபத்தில்லா திருநாளாக கொண்டாட கோவை மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.