Govt Notification
அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: மாநகர போலீசார்
SimpliCity News Team · 25 Oct 2019

கோவை : தீபாவளி தினத்தன்று அரசு ஒதுக்கிய நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை சமயத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.
அதன்படி, கடந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு விதியை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தீபாவளி தினத்தன்று கடந்த ஆண்டு போடப்பட்ட வழக்கு பதிவுகள் ;-
சென்னை - 343
திருவள்ளூர் - 101
காஞ்சீபுரம் - 63
கோவை - 184
நாமக்கல் - 46
திருப்பூர் - 152
சேலம் - 60
திண்டுக்கல் - 11
திருவாரூர் - 31
தஞ்சை - 18
நாகப்பட்டினம் - 27
கிருஷ்ணகிரி - 34
தர்மபுரி - 25
ஈரோடு - 18
புதுக்கோட்டை - 16
கரூர் - 11
பெரம்பலூர் - 11
திருச்சி - 64
விழுப்புரம் - 255
கடலூர் - 29
நெல்லை - 90
தூத்துக்குடி - 31
வேலூர் - 64
திருவண்ணாமலை - 93
கன்னியாகுமரி - 23
மதுரை - 170
விருதுநகர் - 135
புதுவை - 35 பேர் என மொத்தம் 2100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடப்பாண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்த நபர்கள் மீது அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடப்பாண்டும் இந்த நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது ;-
தீபாவளி தினத்தன்று அரசு அறிவித்துள்ள நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தந்த காவல் நிலைய காவலர்கள், ரோந்து வாகனங்களில் செல்லும் காவலர்கள் இது தொடர்பாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.