Govt Notification
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுகாதாரத்துடன் பாதுகாத்து கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர்
SimpliCity News Team · 17 Oct 2019

கோவை : கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுகாதாரத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, லதா, வட்டாட்சியர் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர். கீரணத்தம் ஊராட்சிக்குட்பட்ட முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட காரக்குட்டை ஊரணியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், கரைகளை மேலும் அதிகளவில் அகலப்படுத்தி பலப்படுத்தவும், கரைகளின் ஓரங்களில் மரக்கன்றுகளை நடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கீரணத்தம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அவர்கள் அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு உடனடித்தேவையான, குடியிருப்பு வளாகம் சுற்றிலும், தூய்மை சீர்கேடு ஏற்படாத வகையில் வாரம் இருமுறை தூய்மை சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளவும், பெரிய குப்பைத் தொட்டிகளை வைக்கவும், வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், தவறாமல் சீரான இடைவெளியில் தண்ணீர் வழங்கும்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும், மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு எளிதில் சென்றுவரும் வகையில் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளை இயக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதோடு, அப்பகுதிகளில் குடியிருப்பு வாசிகளால் தேக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தென்மேற்கு பருவ மழை துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முழு அளவில் குளோரினேற்றம் செய்யப்பட்டு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும், ஊராட்சி அலுவலர்கள் தங்களது ஊராட்சிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளுவது அவர்களின் தலையாயக்கடமையாக கொண்டு முழுசுகாதாரப்பணிகளை
மேற்கொள்ள வேண்டும் என்றார்.
சுகாதாரமான குடிநீர் அன்றாடம் விநியோகம் செய்யப்படுவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். குடிநீரில் குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும். மேலும், திறந்த நிலை தொட்டிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முன்னெச்சரிக்கையாக கண்டறிந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கூறினார்,
தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே, உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் தனியார் மனைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து தொற்று நோய் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கொண்டயம்பாளையம் பகுதியில் நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, வையம்பாளையம் முதல் அக்கரகார சாமகுளம் வரை ரூ.1.90 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினையும் ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதிகளில் விநியோகிக்கப்படும் நீர் முழு அளவில் குளோரினேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று தெருக்குழாயில் குடிநீர் அருந்தி பரிசோதித்தார்.
பின்னர், வெள்ளமடை பகுதியில் ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.46.28 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலையினையும், அப்பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள ஜின்னிங் மில் குளத்தினையும் நேரில் பார்வையிட்டு குளக்கரைகளைச் சுற்றிலும் பனைமரங்களை நடவும், குப்பைகள் போடாத வகையில் எச்சரிக்கை பலகைகளை வைக்கவும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.