Govt Notification
இன்று முதல் கோவை - பழனி இடையே வாரத்தில் 6 நாட்கள் பயணிகள் ரயில் சேவை
SimpliCity News Team Photos Balaji · 15 Oct 2019

கோவை : நாட்டின் சிறிய நகரங்களை ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில் 10 பயணிகள் ரயில் சேவை இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் சேலம் - கரூர், பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை ஆகிய மூன்று தற்காலிக ரயில் சேவைகள் இன்று முதல் நிரந்தரப்படுத்தப்பட்டது. இந்த நிரந்தர ரயில் சேவையை டெல்லியிலிருந்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் "பழனி - கோவை" இடையேயான பயணிகள் ரயில் சேவையினை கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிஆர் நடராஜன், மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இந்த ரயில் சேவையானது தொடர்ந்து இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோன்று, சேலம் ரயில் நிலையத்தில் சேலம்-கரூர் இடையிலான பயணிகள் ரயில் சேவையும் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பொள்ளாச்சி-கோவை இடையிலான ரயில் சேவையும் இன்றைய தினம் துவங்கப்பட்டது.