Govt Notification
குன்னூரில் குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க புதிய வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்
SimpliCity News Team · 11 Oct 2019

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறை சார்பில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் புதிய வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.
குன்னூரில் காவல்துறை சார்பில் குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று குன்னூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் சார்பில் புதிய வாட்ஸ்ஆப் எண்ணை (94981 01263) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அறிமுகம் செய்து வைத்தார்.
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் இந்த வாட்ஸ் ஆப் எண்ணிற்கு எப்போது திரும்ப வருவோம் என தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும் வெளி மாநில, மாவட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் வேலை நிமித்தமாகவோ வாடகைக்கு குடியேறினாலோ அப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும், அந்நிய வெளிநாட்டு நபர்களின் நடமாட்டம் வாகனங்கள் அடிக்கடி வருகை ஆகியன குறித்து சந்தேகம் இருந்தால் உடனடியாக வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் அல்லது போட்டோ, வீடியோ ஆகியவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தகவல் அனுப்புபவர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் எனவும் இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், இந்த எண்ணிற்கான தகவல் மையம் அருகில் இருக்கும் காவல் துறை அலுவலகத்தில் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க. உதவியாக இருக்கும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார், காவல் ஆய்வாளர் அம்மாதுரை மற்றும் காவல் துறை துணை ஆய்வாளர்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பரமேஷ்வரன் செயலாளர் ரகீம், பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், வாகன ஒட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.