Govt Notification
வீட்டு வசதிப் பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்
SimpliCity News Team · 31 Jul 2019

கோவை : கோவை வீட்டு வசதிப் பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரர்கள் நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என கோவை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் எஸ். கரிகாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதிப் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரர்களில் மாதத் தவணை மற்றும் நிலுவை தொகை செலுத்த வேண்டிய ஒதுக்கீடுதாரர்கள் வட்டி சலுகை அரசாணையின்படி, அரசாணை எண். 104 வீ.வ.ம.ந.வ. துறை நாள். 15.06.2017-ன்படி தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக, கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஒதுக்கீட்டுதாரர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் கோவை வீட்டு வசதிப் பிரிவு அலுவலக வளாகத்திலேயே சிறப்பு முகாம் அமைத்து வார நாட்களில் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படவுள்ளது. முதல் வாரத்தில் வியாழன் (ம) வெள்ளிக்கிழமை கணபதி, காளப்பட்டி, அனைத்து திட்டங்கள், இரண்டாம் வாரத்தில் வியாழன் (ம) வெள்ளிக்கிழமை பெரியநாய்க்கன்பாளையம், வெள்ளக்கிணர், வீரகேரளம் (ம) இடையர்பாளையம் (அண்ணாநகர்), சௌரிபாளையம் திட்டங்கள், மூன்றாம் வாரத்தில் வியாழன் (ம) வெள்ளிக்கிழமை முதலிபாளையம் திட்டப்பகுதிகளில் நடைபெறுகிறது.
நான்காம் வாரத்தில் வியாழன்(ம) வெள்ளிக்கிழமை டாடாபாத் ஹவுசிங் யூனிட், குறிச்சி, கோவைப்புதூர், பொன்னையராஜபுரம், குன்னூர், சீரநாய்க்கன்பாளையம், மேட்டுபாளையம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் வேலம்பாளையம் (ம) புதுநகர், சேவூர், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, உப்பிலிபாளையம் உழவர் சந்தை அருகில் மற்றும் (109) உப்பிலிபாளையம், பல்லடம் மற்றுமுள்ள இதர அனைத்து திட்டங்களுக்கும் பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பினை அனைத்து திட்ட ஒதுக்கீடுதாரர்களும் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விற்பனை பத்திரம் பெறுவதற்கு, விண்ணப்ப படிவத்தின் அசல், ஒதுக்கீடு ஆணையின் அசல், பணம் செலுத்தியுள்ள ரசீதுகளின் அசல், புல வரைபடம் அசல், வில்லங்க சான்று (ஒதுக்கீடு பெற்ற நாளிலிருந்து இன்று வரை), ஆளறி சான்று (ஆதார் கார்டு) பேன் கார்டு, முகவரி சான்று, உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை வங்கி வரைவோலை, ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் பணப்பரிவர்த்தனை இயந்திரம் மூலமாக இவ்வலுவலகத்தில் செலுத்திட வேண்டும். பணம் செலுத்தியதற்கான ஒப்புகை இரசீதை பணம் செலுத்திய உடனே இவ்வலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட சுழற்சி அடிப்படையில் கிரயப்பத்திரம் வழங்கப்படும் இவ்வாணை ஆகஸ்டு மாதம் முதல் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.