Govt Notification
வி.ஏ.ஓ.க்கள் மீதான புகார்களை தெரிவிக்க கோவை ஆட்சியரகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் பிரிவு தொடக்கம்
SimpliCity News Team · 25 Jul 2019

கோவை : கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏதேனும் புகார்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்களுக்காக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் பிரிவு தொடங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் கோட்டங்கள் மற்றும் 11 வட்டங்களிலுள்ள 292 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணி தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால், புகார் மனுக்களைப் பெறுவதற்காக மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அப்பிரிவிற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதலியாளர் (பொது) தலைவராகவும், வட்டாட்சியர் நிலையில் அலுவலக மேலாளர் (குற்றவியல்) மற்றும் தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர்களை உறுப்பினர்களாக நியமித்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தில் அலுவலக நாட்களில் செயல்படும்.
எனவே, பொதுமக்கள் கோவை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கீழ்க்காணும் கிராம நிர்வாக குறை தீர்க்கும் பிரிவிற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மனுக்கள் அளிக்கலாம்.
முகவரி :
தலைவர் // மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
கிராம நிர்வாக குறை தீர்க்கும் பிரிவு,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோவை 641 018.