Govt Notification
வரும் 25-ம் தேதி முதல் குரூப்-4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு
SimpliCity News Team · 23 Jul 2019

கோவை : குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் 25-ம் தேதி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-4 பணிக்காலியிடத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 4% சிறப்பு இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் இத்தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் 25-ம் தேதி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காதுகேளாத, வாய்பேச இயலாதவர்களுக்கு சைகையில் முறையில் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பிற்கு மனுதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. இப்பயிற்சி பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும் செய்யப்படுகிறது. ஆகவே, போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இத்தேர்விற்கு விண்ணப்பித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள், விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படத்துடன் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி
எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையலாம், என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.