Govt Notification
கோவையில் படித்த இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தும் விதமான பயிற்சி வகுப்பு
SimpliCity News Team · 23 Jul 2019

கோவை : தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வோராண்டும் படித்த இளைஞர்களின் தொழில்திறன் வளர்த்திட திறமைமிக்க பயிற்சி நிறுவனங்கள் மூலம் குறைந்த பட்சம் 46 நாட்கள் முதல் 100 நாட்கள் வரையில் பயிற்சி சான்றுடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.
மேற்படி பயிற்சி நிறுவனங்களால் பயிற்சி முடிவு பெற்றதும் பயிலாளர்களுக்கு உரிய பயிற்சி சான்று வழங்கப்படும். மேலும், தகுதி பெற்ற அனைத்து பயிலாளர்களுக்கும், மேற்படி நிறுவனத்தின் மூலம் வளர்ச்சி பெற்ற தொழில் நிறுவனங்களில் வேலை வாங்கித் தரப்படுவதுடன் ஓராண்டுக்கு அவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்படுவது கண்காணிக்கப்படும். மேலும். சுயமாக தொழில் செய்ய விரும்புவோர்களுக்கு சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் மூலம் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிகடன் ஏற்பாடு செய்து தரப்படும். 2019-20ம் ஆண்டிற்கு மேற்கண்ட பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியகளிலிருந்து தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தகுதிகள்:-
1. விண்ணப்பதாரர்கள் நகர்புற ஏழைகளாயிருக்க வேண்டும்
2. இதற்கு முன்னர் கடந்த 3 ஆண்டுகளுக்குள் SJSRY/ NULM திட்டத்தின்கீழ் எந்தவித திறன் வளர் பயிற்சியும் பெற்றிருக்க கூடாது.
3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பயிற்சியை விட மேம்பட்ட பயிற்சி ஏதும் பெற்றிருக்க கூடாது.
4. மாநில நிர்வாகக் குழுவால் மேற்படிப் பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 2019-20ம் ஆண்டிற்கு மேற்படிப் பயிற்சிக்கு கோவை மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதியிலுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் 31-ம் தேதிக்குள் தொடர்புடைய நகர்புற உள்ளாட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.